கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
பொன்னேரி ரயில் நிலையம் (கோப்பு படம்).
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மைசூரில் இருந்து தர்பங்கா சென்ற பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 11ஆம் தேதி கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி 13பெட்டிகள் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெட்டி தீப்பற்றிய நிலையில் 20பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு 36மணி நேரத்தில் ரயில் சேவையை தொடங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போல்ட், நட்டு கழற்றப்பட்ட நிலையில் விபத்திற்கு சதி வேலை காரணம் என இந்த வழக்கில் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பொன்னேரியில் கடந்த மாதம் இதே போன்ற தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னேரி ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலைய மேலாளர் அறையில் ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இருவேறு சம்பவ நாளில் பணியில் இருந்தவர்கள் மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu