பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க பா.ம.க ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி நகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 54 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகளில் அதன் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
2016 க்குள் முடிக்க வேண்டிய பணிகள் இடையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை காரணம் காட்டி தனியார் நிறுவனம் தனது பணியை கிடப்பில் போட்டது. இதனையடுத்து திட்ட மதிப்பு 74 கோடியே 75 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் இருந்து கூடுதலாக 20 கோடியே 32 லட்ச ரூபாய் வழங்கப்பட்டும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் அங்குள்ள 27 வார்டுகளிலும் சாலையின் நடுவில் ராட்சத கழிவு நீர் தொட்டி புதைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சதுப்பு நிலம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நகராட்சி ஆணையர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அப்பகுதி வாசிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரியும் மாவட்ட செயலாளர் வி. எம். பிரகாஷ் தலைமையில் அங்குள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சு.வை.ரவி, சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் மாசிலாமணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை ஜெயவேல், உள்ளிட்ட பெருந்திரளான பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu