அரசு மருத்துவமனையில் மின்தடையால் அறுவை சிகிச்சை பாதியிலேயே நிறுத்தம்
பாதிக்கப்பட்ட சஞ்சய்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடையால் கூலித்தொழிலாளியின் அறுவை சிகிச்சை பாதியிலேயே நிறுத்தப்பட்டது பற்றிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சஞ்சய். 24 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சஞ்சய்க்கு இடது தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டதால் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. காலை 9 மணியளவில் சஞ்சய் அறுவைசிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு அங்கு எட்டு மயக்க ஊசிகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.நேற்றைய தினம் இங்கு பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது .
கடைசியாக சஞ்சயை அறுவை சிகிச்சைக்காக படுக்கையில் படுக்கவைத்த நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.ஜெனரேட்டரும் பழுதாகி இருந்ததால் நீண்ட நேரமாக சஞ்சயை அறுவைசிகிச்சை அரங்கத்திலேயே வைத்திருந்துள்ளனர்.பின்னர் அறுவைசிகிச்சை செய்யப்படாமலேயே மீண்டும் அவர் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருவேளை அறுவை சிகிச்சை துவங்கியதும் மின்தடை ஏற்பட்டிருந்தால் தனது நிலைமை என்ன ஆகியிருக்குமோ என பாதிக்கப்பட்ட சஞ்சய் வேதனை தெரிவித்தார்.நிறைய ஜெனெரேட்டர்கள் இருக்கும் மருத்துவமனையில் ஏன் இந்த அவலம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் நடக்கும் நேரத்தில் இப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நோயாளியின் நிலைமை என்னாவது, சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில் இதுபோல நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத விதத்தில் மருத்துவ அதிகாரிகள் மிகுந்த கவனத்தில் செயல்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu