பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
பொன்னேரி துணை மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
புயலால் மின்சாரம் தடைபட்டாலும், உடனுக்குடன் சீரமைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. குடிநீர் வினியோகம், மருத்துவமனைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என பொன்னேரியில் ஆய்வு மேற்கொண்ட மின்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே துரைநல்லூர் துணை மின் நிலையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். மின்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு புயல் மற்றும் கனமழை காரணமாக மின் வினியோகம் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததன் பேரில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை, புயல் காரணமாக கடலோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மின்தடை ஏற்படாத வகையில் தேவையான தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 3650 மின்கம்பங்கள், 450 கிமீ மின்கம்பிகள், 40 மின்மாற்றிகள், 1500 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனைகளுக்கும், குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் மின்சாரம் வழங்கிட முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள், மின் ஊழியர்கள் என உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu