பொன்னேரி அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பொன்னேரி அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோப்புகள் நிதி அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாணவர்களை நல்வழிப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறினார்.
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் குறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்க பள்ளியையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5ஆண்டுகளில் 18000 வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை அமைப்புகளை கட்டிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கடந்த 2மாதங்களுக்கு முன் முதலமைச்சர் 1000வகுப்பறைகளை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் மேலும் 1000வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட கோப்புகள் நிதி அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனைத்தும் நிறைவேற்றுவோம் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு நீண்ட காலம் நடத்தப்படாமல் இருந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும், வயது வரம்பு தளர்த்தப்பட்டது என்றும், தற்போது 2500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
நிதிநிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். சிற்பி என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள், காவல்துறை, தன்னார்வலர்களை கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்களை குற்றவாளிகளை போல பார்க்க முடியாது எனவும், கூட்டு பொறுப்பின் அடிப்படையில் மாணவர்களை நல்வழிப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu