பழவேற்காடு அருகே சொந்த செலவில் கிணறு வெட்டிய சட்டமன்ற உறுப்பினர்

பழவேற்காடு அருகே சொந்த செலவில்  கிணறு வெட்டிய சட்டமன்ற உறுப்பினர்
X

புதிதாக வெட்டப்பட்ட கிணற்றில் தண்ணீர் இறைத்தார் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகர்.

பழவேற்காடு அருகே பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த செலவில் கிணறு வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக புதியதாக அமைக்கப்பட்ட கிணறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கடப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆண்டார்மடம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர் குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. குழாய் இணைப்பில் மீண்டும் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டதால் அண்மையில் பெண்கள் காலி குடங்களுடன் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீரின்றி தவிப்பதாகவும் தங்களது கிராமத்தில் உள்ள பழங்கால கிணறும் தூர்ந்து போன நிலையில் புதியதாக கிணறு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ஆண்டார்மடம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சொந்த செலவில் புதியதாக கிணறு ஏற்படுத்தி கொடுத்தார். இந்த கிணற்றினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீரை இறைத்து கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார். நீண்ட காலமாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
smart agriculture iot ai