மீஞ்சூர்; வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை

மீஞ்சூர்; வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை
X

கொலை செய்யப்பட்ட முதியவர் (கோப்பு படம்) மற்றும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.

மீஞ்சூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீஞ்சூர் அருகே, வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். மூன்று தனிப்படைகள் அமைத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (58). இவர் தமது மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வந்தார். இவர் ஐஓசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அவ்வப்போது இரவு நேரங்களில் மது அருந்தும் பஞ்சநாதன், வீட்டில் தூங்காமல் தமது வீட்டின் வெளியே வாடகைக்கு யாரும் வராமல், காலியாக உள்ள கடையில் தூங்குவது வழக்கம். நேற்றிரவும் மது அருந்துவதற்காக வீட்டில் தூங்காமல் தமது கடையில் மது பாட்டிலுடன் பஞ்சநாதன் தங்கியுள்ளார். இரவு தமது மனைவியிடம் தண்ணீர் கேட்டு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, கடைக்குள் பஞ்சநாதன் தரையில் ரத்த வெள்ளத்தில் சுருண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர்.

கடந்த மாதம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த போது மர்ம கும்பல் வழிமறித்து பஞ்சநாதனை அரிவாளால் வெட்டிய வழக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று தூங்கி கொண்டிருந்த பஞ்சநாதன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா, அப்போதே கொலை செய்ய முயன்று தோல்வியடைந்ததால் இரண்டாவது முறையாக முயற்சித்து இன்று கொலை நடந்து உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமா, தொழிற்சாலையில் ஏதேனும் முன்பகை உள்ளதா, குடும்பத்தில் உறவினர்களிடையே பகை உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆங்காங்கே சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கியுள்ளனர். மேலும் கொலையை துப்பு துலக்க 3தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
ai solutions for small business