கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா

கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. திருவிழா காட்சிகள் முதல்படம், தெப்பம், சிறப்பு அலங்காரத்தில் பவனி வரும் ஸ்வாமி மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சௌந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த பத்து நாட்களாக நாள்தோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக எம்பெருமானுக்கும் தாயாருக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக கரிகிருஷ்ண பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வந்தமர்ந்தார். இதையடுத்து திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக பெருமாள் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் தெப்பம் 3முறை வலம் வந்தது. அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் எம்பெருமானை தரிசித்து சென்றனர்.
திருவிழாவை காண மீஞ்சூர், பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, ஆரணி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில், அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu