பொன்னேரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
பொன்னேரி அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அத்திப்பட்டு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை தீர்த்து வைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் 23 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.தினசரி 13 லட்சத்து 30 ஆயிரம் விட்டர் தண்ணீர் ஊராட்சிக்கு தேவைப்படுகிறது. ஆனால் வன்னிப்பாக்கத்திலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் 4 லட்சத்து 30 லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இது கிடைக்க வேண்டியதைவிட மிகவும் குறைந்த அளவாகும், இதனால் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.மக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வன்னிப்பாக்கத்திலிருந்து கூடுதலாக பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சிமன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சில இடங்களில் கொட்டப்படுகிறது.ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து அவைகளை தரம் பிரித்து எருவாக்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல் குடியிருப்புகளிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆங்காங்கு வெளியேற்றி விடப்படுவதால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் ஓரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu