பொன்னேரியில் தொல்லை கொடுத்த தெரு நாய்கள் திடீரென செத்து மடிந்த பரிதாபம்
பொதுமக்களை மிரட்டிய தெரு நாய்கள்.
பொன்னேரி நகராட்சியில் திடீரென தெரு நாய்கள் செத்து மடிந்துள்ளன. வாயில் நுரை தள்ளியபடி இறந்துள்ள இந்த நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இந்த தெரு நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும், வாகனங்களில் அவ்வப்போது விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துவமாய் உள்ளன.
இந்நிலையில் சின்னக்காவனம் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆங்காங்கே வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன. தெருக்களில் சுற்றி திரிந்த நாய்கள் திடீரென காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடிய போது முட்புதர்களில் நாய்கள் அனைத்தும் செத்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் உணவில் விஷம் கொடுத்ததால் அவை அனைத்தும் வாயில் நுரை தள்ளியபடி இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாய்கள் என்ன தான் மனிதர்களுக்கு தீங்கு இளைத்து வந்தாலும் நாய் ஒரு நன்றியுள்ள பிராணி என்றே கருதப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நாய்கள் பல வீடுகளில் செல்லப்பிராணிகளாகவும் வளர்ந்து வருகின்றன. அவற்ளை கட்டிப்போட்டு வளர்ப்பதோடு முறைப்படி பராமரித்தும் வருகிறார்கள்.
தெரு நாய்கள் என்ன தான் பிரச்சினை செய்து வந்தாலும் அதனை கொல்வதற்கு மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு கூட அதிகாரம் இல்லை. முன்பெல்லாம் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட நிலையில் தேசிய அளவில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நாய்களை கொல்வது தற்போது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு மட்டுமே தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கடமை ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu