பொன்னேரி பள்ளியில் மாபெரும் தமிழ் கனவு பரப்புரை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, ‘மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு ‘மாபெரும் தமிழ்க் கனவு” சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழக அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் "மாபெரும் தமிழ் கனவு" பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில்,மண் வளம் மற்றும் பெண்கள் நிலை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
"நிலையான வாழ்க்கை புவிக்காக" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், சுற்றுச்சூழலை சரியான முறையில் பாதுகாப்பதன் மூலமாக நமக்கு விளையும் நன்மைகள் குறித்து அவர் விவரித்தார். "காலத்தோறும் பெண்கள்" என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு அழைப்பாளர்களுடன் கலந்துரையாடிய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா 'கேள்வியின் நாயகன்' என பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu