மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை
X

நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை ரூ. 5 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மீஞ்சூர் அருகே பட்டப் பகலில் மாடி வழியே குதித்து வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ. 5 லட்சம் கொள்ளை நடந்துள்ளது. வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிச் சென்ற மர்ம கும்ப கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ராயல் மாடர்ன் சிட்டியை சேர்ந்தவர் அரிமுத்து. இவர் சென்னை மணலியில் வீட்டுக்கு தேவையான இரும்பால் ஜன்னல்கள் கதவுகள் தயார் செய்யும் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் மீஞ்சூரில் பழைய துணிகளை சேகரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம் போல இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்ற நிலையில் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்த நிலையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரொக்க பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.


மாடி வழியே வீட்டுக்குள் குதித்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப் பகலில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கொள்ளையை அரங்கேற்றிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவர்கள் கழுத்தில் இருந்து ஐந்து சவரன் தங்க நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மீஞ்சூரில் உள்ள ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் மின்சார ஒயர்கள் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டுள்ளன. மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story