உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள்
மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மழைக்காலங்களில் 10 அடி உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவாக மாறிய கிராமங்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 17.கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமங்களில் சுமார் 4000.க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கவுண்டர்பாளையத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல வேண்டிய இந்த கிராமங்கள் மழைக்காலங்களில் 10.அடி உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தனித்தீவுகளாக மாறி மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் தாங்கள் பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளின் அடிப்படையில் கவுண்டர்பாளையத்தில் இருந்து சுப்பாரெட்டிப்பாளையம் செல்ல 17.கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்று கொசஸ்தலை ஆற்றில் 206.மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் சதா, துணைத் தலைவர் பூபாலன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஒப்பந்ததாரர் விஜயகுமார், மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் தமிழ் உதயன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu