காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம் விரிவாக்கம்: மீனவர் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் & டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாகக்கூறி, கடந்த 2008ஆம் ஆண்டு பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோரைகுப்பம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக, நேற்று மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டுப்பள்ளியில், எல் & டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் செல்லும் சாலையில் அமர்ந்து 500க்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவ கூட்டமைப்பை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்த எஞ்சிய ஆயிரத்து 500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பழவேற்காட்டில் இருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் போராட்டக்காரர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் மீனவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைந்த குழு அமைத்து ஒரு வார காலத்திற்குள் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து 9மணி நேரம் நீடித்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஆவடி மாநகர காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்ட களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu