பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் கைது

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் கைது
X

பைல்படம்.

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை. நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை. நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6பேர் கைது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதாக போலீசார் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜவகர் (31). இவர் மீது 2 கொலை, துப்பாக்கி வைத்திருந்தது, கஞ்சா வழக்குகள் என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்த ஜவகர் அண்மையில் சிறையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் பொன்னேரியில் குடியேறியுள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜவகரை தேடி வந்தனர். போலீசில் இருந்து தலைமறைவாக இருந்த ஜவகர் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தமது மைத்துனர் சிகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தமது தாயை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது அவர்களை வழி மறித்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதில் ஜவகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிகன் முகம், கால் என பலத்த காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெட்டுக்காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்த சிகன் என்பவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த பொன்னேரி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். ஜவகர் உடலில் அரிவாளால் ஏற்பட்ட வெட்டுக் காயங்களும், கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கொலையான ஜவகர் தாய் வெண்ணிலா கூறுகையில் கடந்த 1வருடத்திற்கு முன் இதே பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தங்களது குடிசையை எரித்து விட்டதாகவும், அப்போதிலிருந்தே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிவித்தார். ஊரை விட்டே காலி செய்து வெளியூர் சென்ற நிலையிலும் தமது மகனை கொன்று விட்டதாக தெரிவித்தார். கொலையான ஜவகரின் மனைவி சினேகா கூறுகையில், திருமணத்திற்கு சென்று விட்டு தாயை பார்ப்பதற்காக சென்ற தமது கணவர் மற்றும் தம்பி ஆகிய இருவரும் சரமாரியாக வெட்டப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இரு குழந்தைகள் வைத்திருக்கும் நிலையில் தமது கணவரை கொடூரமாக கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேண்பாக்கம் பள்ளத்தை சேர்ந்த விஜி, கார்த்திக், ராஜவேலு, வசந்த், சூர்யா, பாலாஜி ஆகிய 6பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர். உறவினர்களான விஜி, ஜவகர் இருவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பல மாதங்களாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும், கஞ்சா விற்பனை, ரவுடிசம் என யார் பெரியவர் என்ற தொழில் போட்டியில் கொலை நடந்ததுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவகர் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜி உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், அது தெரிந்ததாலேயே விஜி முந்திக்கொண்டு ஜவகரை கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொன்னேரி நகராட்சியின் 26வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக விஜியின் மனைவி கவிதா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கொலை வழக்கில் நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!