காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக வினருக்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம்
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசினார்.
கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை ஆர்.எஸ்.பாரதி கண்டித்தார். செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் எனவும் கட்சி நிர்வாகிக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை வழங்கினார். இதனால் பொன்னேரி அருகே நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பகலவன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கதிரவன், உமா மகேஸ்வரி, எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, சுப்பிரமணி, குணசேகர், வெங்கடாசலபதி, டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி. சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் பேசிய திமுக வர்த்தகர் அணியின் மாநில துணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம் பேசுகையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொதுக்கூட்டம் போல வேண்டாம் எனவும், நமது கட்சி பற்றி மட்டுமே பேச வேண்டும் எனவும், இது தான் நாளை அனைத்து செய்திகளிலும் வரும் என்றார். செய்திகளில் இடம் பிடிக்க வேண்டும் என பேச கூடாது எனவும் அப்போது கட்சி நிர்வாகியை ஆர்.எஸ்.பாரதி கண்டித்தார். தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். பாஸ்கர் சுந்தரம் பேசிய போது குறுக்கிட்டு தடுத்தேன் எனவும் நாளை பத்திரிக்கையில் மூக்கு, நாக்கு வைத்து எழுதி இந்த கூட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விடுவார்கள் எனவும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதற்கு ஆதரவு எனவும் கூறுவார்கள், அதிலும் செய்தியாளர்களுக்கு என் மேல் தனி பாசம் உண்டு, தலைவர் இல்லாத நேரத்தில் நாம் இதிலெல்லாம் சிக்க கூடாது என்பதால் தான் தடுத்தேன் எனவும் அவரது கருத்திற்கு எதிர்ப்பு என்றோ, கண்டித்தேன் என்றோ தவறாக எடுத்து கொள்ள கூடாது என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார், தனது மூத்த சகோதரர் ஸ்டாலின் என்று, ஆகவே இந்த இரு சகோதரர்களின் முடிவே இந்தியா கூட்டணியின் முடிவு என திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியினரை மதிக்க வேண்டும் எனவும், தொண்டர்கள் கூறுவதை காது கொடுத்து கேளுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் முன்பெல்லாம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து எடுத்துரைத்து தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் தமிழில் இருந்த கட்சி சட்ட புத்தகத்தினை கலைஞர் ஆங்கிலத்தில் மாற்றிட உத்தரவிட்டார் எனவும் தெலுங்கு தேச கட்சிக்கே சட்ட திட்ட விதிகள் உருவாக்கிய கட்சி திமுக என்றார்.
கிளைக்கழக பொறுப்புகளில் இருப்பவர்களை ஒன்றிய செயலாளர்களுக்கு தெரியவில்லை எனவும் விமர்சித்தார். 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் இதே போல வெற்றி பெற்றிடலாம் என வெற்றி களிப்பில் இருந்திட கூடாது எனவும், முயலும், ஆமையும் பந்தயத்திற்கு சென்றது போல ஆகி விட கூடாது எனவும், பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு எனவும், அந்தந்த தேர்தலுக்கு வேறு விதமான வாக்குகள் நிர்ணயிக்கப்படும் என்றார். தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக விழுந்த 29% வாக்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரானது கிடையாது எனவும், அது அந்தந்த தொகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு எதிரான வாக்குகள் எனவும், 20மாத இடைவெளிக்குள் அந்த வாக்குகளை முழுமையாக பெற்றிட திமுகவினர் பணியாற்றிட வேண்டும் என்றார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 200தொகுதிகளுக்கு குறையாமல் வென்றிடும் வகையில் திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும் எனவும் அப்போது கட்சியினருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நகரின் மைய பகுதியில் நடப்பதாக கூறுவது தவறு எனவும், நகரின் ஓரமாகவே நடைபெறுவதாக கூறினார். மையம் என்பதற்கு அர்த்தம் என்ன? மையம் என்பது அண்ணாசாலை மட்டுமே, ஓரத்தில்தான் பந்தயம் நடைபெறுகிறது என்றார்.
மகளிரணிக்கு திமுகவில் முக்கியத்துவம் உள்ளதாக பேசிய நிலையில், கட்சியில் முக்கியத்துவம் இல்லை என சில நிர்வாகிகள் கூறுவதாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மற்ற கட்சிகளில் தான் மகளிரணிக்கு முக்கியத்துவம் இல்லை என்றார். தகவல் தொழில் நுட்ப அணி மாநில இணை செயலாளர் சி. ஹெச்.சேகர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அன்புவாணன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஸ்டாலின், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், டி.கே. சந்திரசேகர், கி.வே. ஆனந்தகுமார், எம்.எஸ். கே. ரமேஷ் ராஜ், சத்திய வேலு, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வ சேகரன் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu