அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்; ஓபிஎஸ் பங்கேற்பு

அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
எடப்பாடி பழனிசாமியை அகற்றிவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என்று பொன்னேரி அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார். கொங்கு மண்டலம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசியதாவது,
கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என மரியாதை கொடுத்தோம். ஆனால் அதனை மாற்றிவிட்டு தனக்கு தானே பொதுச் செயலாளர் பட்டத்தை எடப்பாடி பழனிசாமி சூட்டி கொண்டார். எந்த தியாகமும் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை அகற்றிவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது.
கட்சி விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரவுள்ளது. தேர்தல் கூட்டணிக்காக உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு வரப்படுகிறது. அனைத்து பூத்களிலும் ஏஜென்டுகள் நியமிப்பது தற்போது நமக்கு தலையாய கடமை. தேர்தலில் வெற்றி கூட்டணி அமைய உள்ளது. தற்போது உரிமை மீட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதற்கு மக்கள் ஆதரவு தருவதாகவும் கூறினார்.
கொங்கு மண்டலம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என மாற்றியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் சட்டத்தை உருவாக்கினார். எடப்பாடி பழனிசாமியால் தற்போது இந்த உரிமை பறிபோயுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பறிக்கப்பட்ட உரிமைகளை தொண்டர்களுக்கு வாங்கி கொடுப்பதே தற்போது எங்களுடைய முழு நோக்கமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக பரவும் தகவல் குறித்த கேள்விக்கு சந்தித்த பிறகு பதில் தருகிறேன் என்றார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு எங்களுடன் இணைந்து செயல்பட வந்தால் அந்த கட்சிகளுக்கு ஆதரவு தந்து இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார். இதனிடையே கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட சிலர் மண்டபத்தில் இருந்து வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. முன்னதாக ஆலோசனை கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ் அங்கிருந்த அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu