பணி நிரந்தரம் செய்யக்கோரி குடும்பத்துடன் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி குடும்பத்துடன் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் ( மாதிரி படம்)
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 60ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மக்களின் அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் மின்வாரிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இன்று காலை முதல் மாலை வரையில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்திடும் வரையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu