பொன்னேரியில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
X

குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக புகார் செய்யப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சிஐடியு தொழிற்சங்கத்தின் கிளையை தங்களது தொழிற்சாலையில் தொடங்கியுள்ளனர்.

தொழிலாளர்கள் தொழிற்சங்க கிளையை திறந்ததை கண்டித்து நிர்வாகம் தரப்பில் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி 48நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 48வது நாள் போராட்டத்தின் போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் யாரும் சங்க செயல்பாடுகளில் ஈடுபட கூடாது, வேலை நிறுத்த போராட்டம் நடத்த கூடாது, தொழிலாளர் ஆணையரிடம் புகார் கூற கூடாது, விபத்தில் உடல் உறுப்புகள் இழந்தாலும் புகார் தெரிவிக்க கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டால் மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவிப்பதாக புகார் தெரிவித்தனர்.

பொன்னேரி கோட்டாட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் முறையிட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!