இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
X

பொன்னேரி அருகே இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி அருகே இயங்கி வரும் இந்தியன் ஆயில் எரிவாயு நிறுவன விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் திரவ இயற்கை எரிவாயு நிறுவன விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு பயனில்லை எனவும், எரிவாயு குழாய்கள் பதிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் என அப்போது பொதுமக்கள் புகார் கூறினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் திரவ இயற்கை எரிவாயு முனையம் இயங்கி வருகிறது. கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு இங்கு சேமிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. ஆண்டிற்கு 5லட்சம் மெட்ரிக் டன் எரிவாயு கையாளும் திறன் கொண்ட இந்த நிறுவனம் மேலும் 5 லட்சம் மெட்ரிக் டன் எரிவாயு கையாளும் வகையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.


சுமார் ரூ.3400கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகளை 54மாதங்களில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெறப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அத்திப்பட்டில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள், மீனவ பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே கழிவுகளை வெளியேற்றுவதால் மீன்வளம் பாதிப்படைந்துள்ளதாக மீனவ பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். எண்ணூர் ஆற்றில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதித்துள்ள நிலையில் குழாயில் சேதம் ஏற்பட்டால் மீனவர்கள் தான் பாதிக்கப்படுவோம் என தெரிவித்தனர்.

எரிவாயு நிறுவனம் அமைந்துள்ள ஊராட்சியில் உள்ள மக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல், அதே பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், வேறு ஒரு ஊராட்சியில் கூட்டத்தை நடத்துவதாக குற்றம் சாட்டினர். தோல் சம்மந்தமான நோய்கள் அதிகளவில் வந்து கொண்டிருப்பதாகவும், செடி, மரம் என அனைத்தும் கருகி பாதிப்பதாக தெரிவித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பொதுமக்கள் கூறும் கருத்துக்களை பதிவு மட்டுமே செய்து கொள்வதாகவும், வேறு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

நிறுவனம் தொடங்குவதற்கு முன் ஆசை வார்த்தைகள் கூறி மக்களை பலிகடா ஆக்குவதாக குற்றம் சாட்டினர். அபாயகரமான திட்டத்திற்கு அனுமதி தரும் அதிகாரிகள் வேறு இடத்திற்கு பணியிட மாற்றத்தில் சென்று விடுவீர்கள் என்றும், குழாயில் வெடிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தான் பாதிப்பை சந்திப்போம் என தெரிவித்தனர். பொதுமக்களுக்கு எந்த திட்டமும் நன்மை தரவில்லை எனவும், நாசகார திட்டங்களால் வாழ்வதா, சாவதா என ஆதங்கப்பட்ட அவர்கள் இந்த திட்டங்கள் அனைத்தும் அம்பானி, அதானிக்கானது என்றும், வளர்ச்சி அவர்களுக்கானது எனவும், பாதிப்பு மட்டுமே பொதுமக்களுக்கானது என்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் பேசுகையில் மாசு தொடர்பான புகார்கள் வரும் காலங்களில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல், திட்டங்களை தொடங்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். திட்டத்தை துவங்கும் சமயத்தில் வேலை கொடுப்பதாக ஆசை காட்டி விட்டு, அதற்குப்பிறகு கல்வி தகுதி, பயிற்சி பெற்ற இளைஞர்கள் என காரணங்களை கூறி உள்ளூர் மக்களை நிராகரிப்பதாக புகார் தெரிவித்தார். வடமாநில தொழிலாளர்களை முழுமையாக பணியமர்த்தாமல், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செய்ததாக தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றார். உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், உள்ளூர் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா