2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இருவர் கைது

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இருவர் கைது
X

ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேர் கைது செய்தனர்.

செங்குன்றம் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு ஆட்டோ, கார், வேன் மற்றும் லாரிகளில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்பி. கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வேனை மடக்கி சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கடத்தி வந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திராவுக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தியது தெரியவந்தது. இதன் பின், அரிசி கடத்திய சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு, தனசேகரன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story
business ai microsoft