பொன்னேரி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

பொன்னேரி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X
பொன்னேரி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

பொன்னேரி அருகே ஆந்திரா நோக்கி சென்ற கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு மாணவர் பலியானார். மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுமன்(வயது48). இவரது மகன் கோபிநாத்(20). கோபிநாத் தாழம்பூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். கோபிநாத் நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சாலமன்(20). இதே கல்லூரியில் கணினி பொறியியல் படித்து வருகின்றார்.

இந்நிலையில் கோபிநாத், கிறிஸ்டோபர் சாலமன் மற்றும் சில மாணவர்கள் சேர்ந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதய்யா பாளையம் என்கிற பகுதியில் பிரபலமான நீர்வீழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டு 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் சேர்ந்து அவர்களின் இருசக்கர வாகனத்தில் செல்ல முடிவு செய்து அவரவர்களின் இருசக்கர வாகனங்களில் ஏறி தாம்பரத்தில் இருந்து கிளம்பி ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து விட்டு திரும்பவேண்டும் என்பது அவர்களது திட்டமாகும்.

இதில் கோபிநாத் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் கிறிஸ்டோபர் சாலமன் அமர்ந்திருந்தார். அப்போது திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை சென்னை-கொல்கத்தா தேசிய சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மின்னல் வேகத்தில் வந்து பலமாக மோதியது.

இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய கோபிநாத்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னால் அமர்ந்த கிறிஸ்டோபர் சாலமன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார்,

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உடன் வந்த மற்ற மாணவர்கள் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவனை சென்னை அண்ணாநகர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

இதுகுறித்து போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபிநாத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் லாரியா அல்லது வேறு எதுவும் வாகனமா? என தெரியவில்லை. அதனை ஓட்டி வந்தது யார் என்றும் தெரியவில்லை. அந்த வாகனத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சுற்றுலா நோக்கத்தில் பைக்குகளில் சென்ற இச்சம்பவம் சக மாணவர்களான நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story