ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணியர் கோவிலில் சித்திரை கிருத்திகையை விழா

சித்திரை கிருத்திகையை முன்னிட்டு குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது.
அருணகிரிநாதர் இத்தலத்திற்கு வருகைதந்து முருகப்பெருமானை போற்றி பாடல்கள் புனைந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வளவு சிறப்புவாய்ந்த இக்கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சூரசம்ஹாரம் என்றால் திருச்செந்தூர், ஆடி கிருத்திகை என்றால் திருத்தணி, தைப்பூசம் என்றால் பழனி என முருகனுக்கு உகந்த நாட்களில் அந்தந்த ஸ்தலங்களில் பக்தர்கள் திரள்வது வழக்கமாக உள்ளது. அதேபோல சித்திரை கிருத்திகை என்றால் ஆண்டார்குப்பத்திற்கு வந்து முருகனை தரிசிப்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நேற்று இரவிலிருந்தே இங்கு பக்தர்களின் வருகை அதிகமான அளவில் இருந்தது. அதிகாலை முதல் உற்சவர் முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டு உடைகளால், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகிய இரண்டிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பலமணி நேரத்திற்கு பிறகு முருகனை வழிபட்டு சென்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவிலுருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தந்து தமிழ் கடவுள் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu