செல்லி அம்மன் கோவில் திருவாச்சி திருவிழா; பக்தர்கள் பரவசம்

பெரும்பேடு செல்லி அம்மன் கோவில் திருவாச்சி திருவிழாவில், கிராம மக்கள் அம்மனுக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொன்னேரி அருகே பெரும்பேடு செல்லி அம்மன் கோவில் திருவாச்சி திருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள், அம்மனுக்கு படையலிட்டு, பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி செல்லி அம்மன் ஸ்ரீதேவி பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் ஊர் எல்லையில் காவல் தெய்வமாக நின்று தங்கள் ஊரை நோய் நொடியின்றி காத்து வருவதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
இக்கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆனி மாதத்தில் நடைபெறும் திருவாச்சி திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.
கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவை தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கு கூழ் வார்த்தல், வாடை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் விமரிசையாக நடந்து வந்தது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும், அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நாள்தோறும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றிரவு செல்லியம்மன் பொன்னியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.திருவிழாவை முன்னிட்டு ஊர் முழுவதும் விநாயகர், சிவன் பார்வதி, பெருமாள், அம்மன் உருவங்கள் மின்விளக்குகளால் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நள்ளிரவில் மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் செல்லி அம்மன் பொன்னியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதிவுலா புறப்பட்டனர்.வீதிவுலாவின்போது கிராமத்திலுள்ள அத்தனை வீடுகளிலும் பக்தர்கள் அம்மனுக்கு பிடித்தமான அதிரசம், முறுக்கு, கடலை உருண்டை உள்ளிட்ட பலகாரங்கள் மற்றும் ஒன்பது வகையான பழவகைகளை படையலிட்டு கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் செலுத்தினர்.மிகவும் கோலாகலமாக நடந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu