அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் தமது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது எதிரே வந்த லாரி காரின் மீது மோதி காருக்குள் வைத்து மனோகரனை மனைவி, குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு மனோகரனின் உடல் கொண்டக்கரை ஊராட்சியில் நேற்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தியதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கூட்டாக இரங்கல் அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தின் போது கார் மீது லாரி மோதும் சி.சி.டி.வி. காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிகழ்ச்சி முடிந்து தமது குடும்பத்தினருடன் சாலையின் இடதுபுறமாக மனோகரன் கார் வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிரே சாலையின் வலதுபுறத்தில் வந்த லாரி மனோகரனின் காரை வழிமறித்து நின்று மனோகரன் காரில் உள்ளாரா என்பதை உறுதி செய்து கொண்டு காரை பின்நோக்கி முட்டி செல்கிறது. பின்னர் லாரியில் இருந்து மர்ம கும்பல் இறங்குவது வரை இந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சிலரிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வமாக பத்திரிகை செய்தி குறிப்பு வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu