பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
X

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளியில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில் 4பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளி வாகனங்களின் மூலமும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் பெற்றோர்களுடனும் பள்ளிக்கு வந்து சென்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில் வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மாணவர்களை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் காவல்துறையினரும் பள்ளிக்கு விரைந்து வந்தனர். திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை கமான்டோ படையினர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதா என தற்போது தீவிர சோதனையானது நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் திடீரென வீட்டிற்கு அனுப்பப்பட்டதால் எதனால் அனுப்பப்படுகிறோம் என்பது தெரியாமல் மாணவர்களும், பள்ளியில் இருந்து அவசரமாக குறுஞ்செய்தி வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு வந்ததால் பெற்றோர்களும் பதறி அடித்தபடி வந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

நான்கு பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்திய பிறகு உண்மையாகவே வெடிகுண்டு உள்ளதா அல்லது ஏதேனும் புரளியா என்பது தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் திடீரென வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.


Tags

Next Story
ai solutions for small business