மீனவ குடியிருப்பில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்பு அரண்

மீனவ குடியிருப்பில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்பு அரண்
X

தடுப்பு அரணை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த காவல் ஆணையர்

கனரக வாகனங்கள் எண்ணூர் மீனவ குடியிருப்பில் செல்வதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்பு அரணை காவல் ஆணையர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கனரக வாகனங்கள் எண்ணூர் மீனவ குடியிருப்பில் செல்வதை தவிர்க்கும் வகையில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. இதனை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மீஞ்சூர் சுற்றுப்பகுதியில் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை ஆணையர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள தொப்பி, கூலிங் கண்ணாடிகளையும், இரவு நேரங்களில் ஒளிரும் மேலங்கி ஆகியவற்றை போக்குவரத்து காவலர்களுக்கு ஆணையர் வழங்கினார்.

தொடர்ந்து போக்குவரத்து காவலர்களிடம் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செல்பி எடுத்ததால் காவலர்கள் உற்சாகமடைந்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்களால் மீனவ கிராமங்களில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த அரண் அமைக்கப்பட்டதாகவும், போக்குவரத்து விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் மேலும் 2காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து பரிசீலித்து வரப்படுவதாகவும், அரசிடம் ஒப்புதல் பெற்று அதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆணையர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும், துறைமுகங்கள், தொழில் நிறுவனங்களில் இருந்து செல்ல கூடிய கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

குட்கா, கஞ்சா பதுக்கல் தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்தார். மேலும் சாலை விபத்துக்களில் மாணவர்கள் சிக்குவதை தவிர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தன்னார்வல மாணவர்களை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்தி சாலை பாதுகாப்பை மாணவர்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் அப்போது தெரிவித்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!