பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் கைது

பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு படகுகளில் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர்
பழவேற்காட்டில் தடையை மீறி முகத்துவாரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற பா.ஜ.க. தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹீம் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மற்றும் ஆந்திராவின் 69க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வரும் நிலையில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிபாட்டு சுவர் அடிக்கல் நாட்டு விழாவை திருவள்ளூர் எம்.பி. ஜெயகுமார், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்தப் பணிகள் ஏறக்குறைய 3மாதங்களில் முடிக்கப்பட்டு படகுகள் எளிதாக சென்று, வந்து மீனவர்கள் பயனடையும் வகையில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எம்.பி. தெரிவித்த நிலையில் பணிகள் தொடங்க சென்ற போது வனத்துறை அதிகாரிகள் பணிகளை தடுத்து நிறுத்தினார்.
இந்த நிலையில் இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பா.ஜ.க.வினர் பலர் முகத்துவரம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்போது உரிய அனுமதி பெற்றால் தான் செல்ல முடியும் என காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறி முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம்,மாநில இளைஞரணி செயலாளர் வினோத் பி செல்வம்,மாவட்ட தலைவர் செந்தில், உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழவேற்காட்டில் கைது செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் பழவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
மேலும் பாடியநல்லூர் சோழவரம் மாவட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீனவர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்யச் சென்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பா.ஜ.க. வினரை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . மேலும் பழவேற்காடு பகுதியில் காவல்துறையினர் நூற்றுக்கு மேற்பட்டோர் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu