ஒன்றிய அலுவலகத்தில் திமுக - அதிமுகவினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.
பெரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் என்பவர், தனது ஊராட்சி குடிநீர் தேவைக்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கான உத்தரவை பெறுவதற்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்த பிரச்சனையில் நந்தியம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் கதிரவன் என்பவருக்கும் பெரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சமரச கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையன்று மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இருதரப்பினரையும் அழைத்ததின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமையில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி முன்னிலையில் சமரச கூட்டம் நடைபெற்ற போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அமளியில் ஈடுபட்ட போது, மீஞ்சூர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu