மண் அள்ள எதிர்ப்பு- கிராம மக்கள் போராட்டம்

மண் அள்ள எதிர்ப்பு- கிராம மக்கள் போராட்டம்
X

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் மண் ஏற்றிய லாரி, பொக்லைன் இயந்திரங்களை விரட்டியடித்தனர்.

திருவள்ளுவர் மாவட்டம் வெங்கல் அருகே புன்னப்பாக்கம் ஏரியில் அண்மையில் சவுடு குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று காலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏரியில் இருந்து சவுடு மண் ஏற்றி செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. லாரிகளில் மண் ஏற்றப்படுவது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராம ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் சரிந்து குடிநீர், விவசாய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் கறுப்பு கொடிகளை கைகளில் ஏந்தி ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

குவாரி செயல்பட்டால் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசாரிடம் குவாரி செயல்பட கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து லாரிகளில் ஏற்றப்பட்ட சவுடு மண் ஏரியிலேயே கொட்டப்பட்டது. இதனை தொடர்ந்து லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் ஏரியில் இருந்து கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்