பழமை வாய்ந்த சிவகாமவல்லி உடனுறை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.
பெரியபாளையம் அருகே ஆரணியில் பழமை வாய்ந்த சிவகாமவல்லி உடனுறை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் ஆரணியில்1050 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புவாக எழுந்தருளிய சிவகாமவல்லி உடனுறை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1985-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் கடந்த 6-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், நடைபெற்றது.7-ஆம் தேதி விசேஷ சாந்தி இரண்டாம் காலையாக பூஜை, அனைத்து மூர்த்தங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்,பூர்ணாஹூதி, ஆயுத பூஜைகள் நடைபெற்றது.8-தேதி ஞாயிற்றுக்கிழமை மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், நடந்து முடிந்த பின் யாக குண்டத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் கைலாய வாத்தியம் முழக்க ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு மூலவர்,அம்மன் உற்சவர் மூர்த்தி களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன் திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடைகளால், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திருவிழாவை காண ஆரணி சுற்றியுள்ள பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, குமரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆரணி நகரச் செயலாளர் முத்து, பொருளாளர் கரிகாலன், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமாரன் உள்ளிட்டவருக்கு ஆலயத்தின் சார்பில் கும்பம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu