சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
விபத்தில் சேதம் அடைந்த பேருந்து.
சோழவரம் அருகே லாரிமீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு மாணவர்கள் உட்பட ஐந்துபேர் படுகாயம் அடைந்தனர்.காயம் அடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டையில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் பேருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.வியாசர்பாடியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார்.
பஞ்செட்டி அடுத்த அத்திப்பேடு அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரிமீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் மேம்பாலத்தின் சுவரில் உரசி பேருந்து நின்றது.இந்த விபத்தில் தனியார் கல்லூரியின் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல சுக்கு நூறாக நொறுங்கியது.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர், ஒரு மாணவி, மூன்று மாணவர்களுக்கு பாடியநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி ரஃப சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லாரிமீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu