கல்லால் தாக்கப்பட்ட வியாபாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லால் தாக்கப்பட்ட வியாபாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சையது உசேன்.

மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனம் மோதல் விவகாரத்தில் கல்லால் தாக்கப்பட்ட வியாபாரி மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன் (வயது 40). இவர் மீஞ்சூரில் காலணி மற்றும் பை விற்பனை செய்து வந்தார்.கடந்த 14ஆம் தேதி இரவு கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி கொண்டு தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் அடையாளம் தெரியாத நபர் சையத் உசேனிடம் தகராறு செய்து கல்லால் பலமாக தாக்கியுள்ளார்.இதில் சையத் உசேன் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 2நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சையத் உசேன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருவரை பிடித்து மீஞ்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு கொலை வழக்கு பிரிவாக மாற்றப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதேச்சையாக நடைபெற்ற விபத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது முன்பகை காரணமாக திட்டமிட்டே நடத்தப்பட்டதா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story