சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் அதிக அளவில் திரண்ட பக்தர்கள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் அதிக அளவில் திரண்ட பக்தர்கள்
X
சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவில்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் அதிக அளவில் திரண்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி பௌர்ணமி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னம்பேடு சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தொடர்ந்து 6செவ்வாய்க் கிழமை நாட்களில் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வைத்து, வழிபாடு நடத்தினால் திருமணத்தடை, வீடு கட்டுதல், ரியல் எஸ்டேட், அரசியல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் விழா நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நாட்கள் மட்டுமல்லாமல் கோவிலுக்கு வாரத்தில் 7நாட்களும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரத் தொடங்கி விட்டனர்.


இன்று ஆடி பௌர்ணமி முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. முத்தங்கி அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று ஆடி பௌர்ணமி முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி கோவில் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டி வீடு கட்ட செங்கற்களை அடுக்கி வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஆலயத்தின் சார்பில் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story