மீஞ்சூர் அருகே பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
மீஞ்சூரில் பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தில் இருந்து நான்கு சவரன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் மோகனவள்ளி (வயது31). சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றும் மோகனவள்ளி நேற்று மாலை பணி முடித்து சென்னையில் இருந்து புறநகர் ரயில் மூலம் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி தமது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோகனவள்ளியின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனவள்ளியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் அறுத்து சென்றதில் தாலி, பொட்டு உள்ளிட்டவை பறிபோன நிலையில், தாலி சரடில் ஒரு பகுதி மட்டும் அறுந்து கீழே விழுந்து கிடந்ததுள்ளது. நான்கு சவரன் தாலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மோகனவள்ளியை இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டபடியே பின் தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் சிறிது தூரம் சென்று மீண்டும் எதிரிலே திரும்பி வந்து செயினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளின் அடிப்படையில் மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற இளம் பெண்ணிடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே மீஞ்சூர் பஜாரில் மனோஜ் என்பவர் டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த போது அவரிடம் இருந்து 20000ரூபாய் மதிப்பிலான ஆன்ட்ராய்டு செல்போனை மர்ம நபர்கள் இருவர் பறித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu