திடீரென பெய்த கனமழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

பொன்னேரி அடுத்த ஆங்காடு திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தன. தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆங்காடு கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வெளியேற வடிகால் முறையாக இல்லாததால் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.நெல்மணிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைத்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 25000ரூபாய் முதல் 30000ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக விளைநிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிப்படைந்த தங்களது நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!