சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு
X

சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை. 

பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டல பூஜைகள் நிறைவடைந்தன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு கட்டுதல் மனை பிரச்சனை உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த 48 நாட்கள் மண்டல பூஜையின் நிறைவு நாளான முன்னிட்டு ஆலய தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையில், செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் இன்று.8 ஆம் தேதி ஆலய வளாகத்தில் பத்துக்கு மேற்பட்ட புரோகிதர் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு. மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடர்ந்து தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து முடிந்த பின்னர் வண்ண மலர்களால் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) துரை சந்திரசேகர், சோழவரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வ சேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி தேவராஜ், துணைத் தலைவர் சேகர், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த மண்டல பூஜை விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா