மீஞ்சூரில் மனைவி, மகளை கத்தியால் குத்திய ஏட்டு கைது
மீஞ்சூரில் கத்தி குத்துப்பட்ட பூர்ணிமா, கத்தியால் குத்திய கணவர் ஏட்டு ராஜேந்திரன்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு பூர்ணிமா என்பவருடன் திருமணம் நடந்து 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் தலைமை காவலர் ராஜேந்திரன் தமது மனைவி பூர்ணிமாவிடம் விவாகரத்து கேட்டு வந்துள்ளார். அப்போது, 3 மகள்கள் மற்றும் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஜீவனாம்சம் தராமல் விவாகரத்து கொடுக்க முடியாது என பூர்ணிமா கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று தலைமை காவலரான ராஜேந்திரன் விவாகரத்து நோட்டீசில் கையெழுத்திட மறுத்த மனைவி பூர்ணிமாவை சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற அவரது மகள் பத்மினியையும் கத்தியால் குத்திவிட்டு மீண்டும் மனைவியை கத்தியால் குத்தும்போது கத்தி உடைந்து வயிற்றுக்குள் சிக்கியது.
இதனையடுத்து தலைமை காவலர் ராஜேந்திரன் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறி சென்றுள்ளார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு மீஞ்சூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்தி வயிற்றில் இருந்ததால் பூர்ணிமாவிற்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள இருவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தலைமை காவலர் ராஜேந்திரன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட மறுத்ததால் மனைவியை குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி, மகளை தலைமை காவலர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu