சுற்றுலா வந்தவர் நீரில் மூழ்கி பலி

சுற்றுலா வந்தவர் நீரில் மூழ்கி பலி
X
பழவேற்காடு ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம். கொரானா சூழ்நிலையில் பழவேற்காட்டில் படகு சவாரி மற்றும் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் ஆண்டார்மடம் அருகே சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சென்னை மணலியிலிருந்து பாலாஜி(32) , சரவணன்,கார்த்திக்,குணசேகர் ஆகிய 4 பேர் பழவேற்காடு பகுதிக்கு சென்றுள்ளனர். பழவேற்காடு பகுதிக்கு செல்ல காவல்துறையினர் தடுத்து விட்டதால் மீண்டும் திரும்பிச் செல்லும்போது வழியில் ஆண்டார்மடம் அருகே ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். வடகிழக்கு பருவமழை பெரு வெள்ளத்தால் ஆண்டார்மடம் அருகே ஆற்றின் கரை உடைந்து சாலை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும்போது இந்த பள்ளத்தில் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்து தண்ணீரில் மூழ்கியபடி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதில் பாலாஜியை தவிர மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர். பாலாஜி கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருப்பாலைவனம் மற்றும் காட்டூர் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர், காட்டூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து நீச்சல் தெரிந்தவர்களைக் கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய பாலாஜியை கண்டுபிடித்து பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!