நேர்மையால் ஏராளமான இழப்புகள்: சகாயம் ஐஏஎஸ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், தமிழக மக்களின் வாழ்வு மேம்பட ஐஏஎஸ் பதவியை கருவியாக பயன்படுத்தி என்னால் முடிந்த அளவு நேர்மையாக பணியாற்றினேன் என்றும் இனிமேல் என்னால் ஐஏஎஸ் பணியில் இருந்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது என்பதால் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்துள்ளேன் இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, இதில் நெருக்கடி ஏதும் இல்லை என்றும் கூறினார்.
மக்கள் பாதை அமைப்பு தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு இளைஞர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்று நீண்டதொரு விளக்கம் அளித்தார். 3வது அணி குறித்த கேள்விக்கு தற்போது தான் அரசுப் பணியில் இருந்து வெளியே வந்துள்ளதால் அதுகுறித்து பதிலளிக்க தமக்கு அனுபவம் இல்லை என கூறினார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தாம் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழுகிறது என சகாயம் கேள்வி எழுப்பினார். ஊழலுக்கு எதிராக நான் நேர்மையாக நின்றதால் ஏராளமான இழப்புக்களை சந்தித்துள்ளேன் என்றும், ஊழலை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து களமாடினால் மக்கள் எதிர்பார்க்கும் எந்த மாற்றமும் சாத்தியமாகும் என தெரிவித்தார். அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் மழுப்பலாக பேசி நழுவினார் சகாயம். அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையோடும், அறத்தோடும் பணியாற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு சகாயம் வேண்டுகோள் விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu