தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை

தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை
X
தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் பரிசோதனை.

தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் பரிசோதனை எடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு. கொரோனா தொற்று உறுதியானதால் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிதாக பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓமிக்ரான் சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சுகாதார அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் திருமால் நகரைச் சேர்ந்த 32 வயது நபர் சமீபத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்தால் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெளிநாட்டில் வந்திருப்பதால் அவருக்கு ஓமிக்ரான் தொற்றுக்கான வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை சென்னைக்கு அனுப்பி ஓமைக்ரான் சோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சோதனை முடிவு வரும் வரை அந்த நபர் மருத்துவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட உள்ளார்.

இதற்கிடையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த 78 பேருக்கும், நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும் அந்த நபர்களையும் சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் முதன் முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story