நெல்லை ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் அமைச்சர் ஆய்வு
ராதாபுரம் அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது 25 ஆயிரமாக உள்ளது. இதனை 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாபுரம் அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் வரும் கல்வியாண்டில் புதிதாக நான்கு பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். கூடுதலாக 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் உள்ள கட்டிடங்கள், மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி கருவிகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் உள்ள பேட்டரி காரையும் இயக்கி அவற்றின் செயல்திறன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் திறன் மேம்பாடு தொழிற் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சி.வி கணேசன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 90 தொழிற் பயிற்சி கல்லூரிகள் உள்ளன. முதல்வர் உத்தரவுப்படி இவற்றை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். அதனடிப்படையில் ராதாபுரம் தொழிற்பயிற்சி பள்ளியை ஆய்வு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் இருபத்தி ஐயாயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனை 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. ராதாபுரம் தொழிற்பயிற்சி பள்ளியைப் பொறுத்தவரை 100 சதவீத மாணவர் சேர்க்கை நடந்து உள்ளது. தற்போது 206 மாணவர்கள் உள்ளனர். மேலும் இந்த பகுதியின் தேவைகளைக் கருத்திற்கொண்டு மரைன், சிவில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டண்ட், உள்ளிட்ட நான்கு புதிய படிப்புகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும், அதோடு கூடுதலாக மாணவர் சேர்க்கைக்காக 280 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். புதிய தொழிற்பயிற்சி பள்ளிகளும் அமைக்கப்பட உள்ளது, தொழிற்பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் என்ற நிலை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராதாபுரம் பேருந்து நிலையத்திலுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் வீரராகவ ராவ், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu