நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
மூன்றாவது அலையை எதிர் கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிக்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 1-ந்தேதி முதல் வரும் 8-ந்தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சித்த மருத்துவத்துறை சார்பில் பாளையங்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வோம், முக கவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொது இடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இதனைத் அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் விஷ்ணு கூறுகையில்:-தமிழக அரசு உத்தரவுப்படி கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டம் முழுதும் கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. 2-வது அலையைப் பொறுத்த வரை ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. எனவே 3-வது அலையை எதிர் கொள்ளும் வகையில் கூடன்குளத்தில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பிளாண்டுகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதுபோன்று மாவட்டத்தில் 9 இடங்களில் கோவிட் கேர் சென்டர் செயல்பட்டு வந்தது. அதனை 24 மணி நேரத்தில் மீண்டும் செயல்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் என்பது தட்டுப்பாடு இல்லாமல் தேவையான அளவு உள்ளது, 3-வது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து தயார்நிலையில் உள்ளது.
அதுபோன்று கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விரைவில் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu