நெல்லையில் தாெடர் காெலை எதிராெலி: தென்மண்டல போலீஸ் ஐஜி ஆய்வு
தென்மண்டல போலீஸ் ஐஜி அன்பு.
நெல்லையில் நான்கு நாட்களில் ஐந்து கொலை எதிரொலியாக தென்மண்டல போலீஸ் ஐஜி அன்பு நெல்லையில் முகாமிட்டு ஆய்வு. தொடர்ந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடிபட்டிருப்பதாகவும், பொதுமக்கள் சமாதானமாகவும், சமத்துவமாகவும் இருக்க வேண்டும் எனவும் ஐஜி அன்பு பேட்டியில் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் அடுத்தடுத்து ஐந்து கொலை சம்பவங்கள் அரங்கேறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி மேலச்சேவலை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து பிராஞ்சேரியை சேர்ந்த மாரியப்பன் தலை மற்றும் கால் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். உஷாரான காவல்துறையினர் கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் நேற்றிரவு பாளையங்கோட்டையை சேர்ந்த இளைஞர் அப்துல் காதர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லபட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்திலும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியது. மொத்தத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொலை சம்பவங்களால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொடர் கொலைகள் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தொடர் கொலை சம்பவங்களை தொடர்ந்து தென் மண்டல காவல்துறை ஐஜி அன்பு இன்று நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணுவை சந்திந்து மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்தார்.
ஆட்சியருடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த ஐஜி அன்பு பத்ரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளி உடனே கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வேறு எதும் சம்பவங்கள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர் மீது மிகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளோம். பொதுமக்கள் சமாதானமாகவும், சமத்துவமாகவும் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் குற்றவாளிகள் ஒரிரு நபர்கள் தான் கைது செய்யப்பட வேண்டும். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu