புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்- ஊழியர்களுக்கு பாராட்டு
திருநெல்வேலி பெருநை புத்தகக்கண்காட்சி வெற்றி பெற உழைத்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கு சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
நெல்லை பொருநை புத்தக்கத்திருவிழா நிறைவு பெற்றது, இந்த கண்காட்சியை 3.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், பொருநை நதியான தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என புத்தகத்திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நெல்லையில் நெல்லை பொருநை 5-வது புத்தகத்திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 17-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற்றது. இதில் 126 அரங்குகளில் கலை , இலக்கியம் , வரலாறு , அரசியல் , என பல்வேறு பிரிவுகளில் லட்சக்கணக்கான புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் புத்தக கண்காட்சியில் தினமும் பொதுமக்களை கவரும் வகையில் கருத்தரங்கம், கவி அரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணிநேரம் 11 நாட்கள் சாதனை நிகழ்வாக தொடர் புத்தக வாசிப்பு நடைபெற்றது.
11 நாட்கள் நடந்து முடிந்த நிலையில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊர்புற நூலகத்திற்கு புத்தகங்களை ஆட்சியர் வழங்கியதுடன் , புத்தக திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள் , ஊழியர்கள் , ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கியும் பாராட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில்: மக்களின் முழு ஒத்துழைப்போடு நெல்லை பொருநை புத்தகத் திருவிழா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் அவர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது தமிழர் நாகரிகத்தின் அகழாய்பு பொருட்களை காட்சி படுத்த நெல்லையில் பொருநை அருட்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன்பாகவே இந்த புத்தக கண்காட்சியில் ஆதிச்சநல்லூர் , சிவகளை ஆகிய அகழாய்வு கண்டு எடுப்புகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இதனால் அகழாய்வு குறித்து மக்கள் நல்ல விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர் .
பொருநை நதியான தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாறவேண்டும். மாவட்டத்தில் 1850 நீர் நிலைகள் உள்ளது. அதனை மீட்டெடுத்து நாம் பாதுகாக்க வேண்டும். இந்த புத்தக கண்காட்சியில் தொடங்கப்பட்ட புத்தக பாலம் அமைப்பும் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பெறப்பட்ட 53 ஆயிரம் புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள 17 கிராமப்புற நூலகங்களுக்கு வழங்ப்பட்டுள்ளது. 94 நூலகங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை 11 நாட்களில் மூன்றரை லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என தெரிவித்தார்.
முன்னதாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து 264 மணிநேரம் 1750 பேர் புத்தக வாசிப்பில் ஈடுபட்ட சாதனை நிகழ்வுக்கு ஆரஞ் உலக சாதனை விருது ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. விழாவின் நிகழ்வாக பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இலக்கிய வாதிகள் , படைப்பாளிகள் , பொதுமக்கள் , மாணவ- மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu