கொலை வழக்கு-திருச்சி கோர்ட்டில் போலீஸ் டி.எஸ்.பி 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார்
திருச்சி கோர்ட்டு (பைல் படம்)
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகிய இருவரும் கடந்த 20 -1 2007 அன்று காருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் எரிக்கப்பட்டு இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
கள்ளக்காதல் தகராறில் நடந்த இந்த கொலை தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவலை சேர்ந்த சாமியார் கண்ணன் அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீதாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று திருச்சி மண்டல சி.பி.சி.ஐ.டி.போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி, நீதிபதி ஜெயக்குமார் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சுமார் 5 மணி நேரம் அவர் சாட்சியமளித்தார்.
துரைராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் ,சாமியார் கண்ணனுக்கும்,துரைராஜுக்கும் ஏற்பட்ட முன்விரோதம், திருவானைக்காவலில் உள்ள வீட்டில் வைத்து துரைராஜை கொலை செய்வதற்கு, அவரை வரவழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன், செல்போன் உரையாடல், கொலை செய்த பின்னர் உடலை எரிப்பதற்காக எடுத்துச் சென்றது எப்படி? சம்பவ இடத்தில் எரிக்கப்பட்ட காரைமுதலில் பார்த்த சாட்சிகள் அளித்த வாக்குமூலம் ஆகிய அனைத்தையும் பதிவுசெய்தார்
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் சி.பி.சிஐ.டி .போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜரானார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், மனோகரன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையையொட்டி சாமியார் கண்ணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக யமுனா இன்று அழைத்து வரப்பட வில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu