பூட்டியே கிடக்கும் திருச்சி கண் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்: மக்கள் அவதி
பயணிகளுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பயணிகள் நிழற்குடை.
திருச்சி மாநகராட்சி பகுதியில் தனியார் பங்களிப்புடன் கூடிய குளிர்சாதன பயணிகள் நிழற்குடை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வகையில் திருச்சி மாநகரில் பல பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த குளிர்சாதன பயணிகள் நிழற்குடையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவன விளம்பரங்கள் இடம் பெறச் செய்தன. மேலும் அந்த நிழற் குடைகளை அந்த நிறுவனங்களே பராமரித்து வந்தன. இந்த வகையில் திருச்சி கண்டோன்மெண்ட், ஜோசப் கண் மருத்துவமனை அருகில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை கடந்தாண்டு பிரம்மாண்டமாக துவக்கப்பட்டது.
துவங்கப்பட்ட நாளில் மட்டுமே பேருக்கு திறந்திருந்த அந்த பயணியர் நிழற்குடை பின்னர் திறக்கப்படவே இல்லை. பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடை என்றாலும், அதில், முழுக்க, முழுக்க அந்த மருத்துவமனையின் விளம்பரமே அதிகளவில் இடம் பெற்றுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண், பெண் என அதிகமானோர் உபயோகிக்கப்படும் பஸ் நிறுத்தத்தில் உள்ள இந்த நிழற்குடை பூட்டியே கிடக்கிறது.
அவ்வழியே செல்லும் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் இன்று வரை இந்த நிழற்குடையை திறக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் நிழற்குடை இருந்தும் பொதுமக்கள் வெளியில் நின்று பஸ் ஏறுவது வேதனைக்குரிய விஷயமாகும். வெறும் விளம்பர நோக்கில் அமைக்கப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை மூடப்பட்டு கிடப்பதை மீண்டும் திறந்து மாநகராட்சி தன் கட்டுப்பாட்டுகள் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu