திருச்சியில் கடும் சோதனைகளை தாண்டி நீட் தேர்வு எழுதிய மாணவிகள்

அதிகாரிகள் நடத்திய கடும் சோதனைகளை தாண்டி மாணவிகள் நீட்தேர்வினை எழுதினர்

எம்.பி.பி.எஸ்., எம்.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வான 'நீட்' தேர்வு திருச்சி மாவட்டத்தில் இன்று 21 மையங்களில் நடைபெற்றது. 9 ,105 மாணவ -மாணவிகள் இந்த தேர்வினை எழுதினார்கள் .

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தான் தொடங்கியது என்றாலும் தேர்வு மையங்களின் முன்பாக காலை 10 மணியில் இருந்தே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அந்த மையங்களின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டியதும் மாணவ மாணவிகள் மட்டுமே அவர்களது அடையாள அட்டை மற்றும் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை போலீசாரிடம் காட்டிவிட்டு தேர்வு மையத்திற்கு செல்ல தொடங்கினர்.

அப்படி சென்றவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முக கவசம் அணிந்தபின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாணவிகள் தேர்வு மையத்திற்குள் செல்ல பல விதமான சவால்களையும், சோதனைகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவிகள் அணிந்திருந்த கழுத்து செயின், தோடு, கொலுசு ஆகியவற்றை கழற்றிவிட வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் பெற்றோர்கள் அவற்றை கழற்றி எடுத்தனர்.

சில மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். சில மாணவிகள் இறுதிக்கட்டமாக தங்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுடன் செல்போனில் பேசினார்கள். இப்படி அரங்கேறிய காட்சிகள் பெரும் பரபரப்பாக இருந்தது. இது போன்ற கடுமையான சோதனைகள், சவால்களைத் தாண்டி மாணவிகள் மன தைரியத்துடன் தேர்வினை எழுதி விட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story