திருச்சியில் நேற்று முதல் விடிய விடிய கனமழை

திருச்சியில் நேற்று முதல் விடிய விடிய கனமழை
X
திருச்சியில் நேற்று மதியம் முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இந்தநிலையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 1 மணி அளவில் கன மழை பெய்தது. சற்று நேரம் நீடித்த இந்த மழை அதன்பிறகு சிறிதுநேர இடைவெளியில் விட்டு, விட்டு பரவலாக பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஒருசில தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் மெல்ல வடிய தொடங்கிய நிலையில், தற்போது திருச்சியில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

தொடர் மழைக்கு திருச்சியில் பெரும்பாலான சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் மாநகர் பகுதியையொட்டியுள்ள விரிவாக்க பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசம் அடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியே நடந்து வர முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள். திருச்சி மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் கடைவீதிக்கு சென்ற பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே அரியமங்கலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து மழைநீருடன் ரெயில்வே தண்டவாளத்தில் ஆறாக ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!