பலத்த மழையால் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்

பலத்த மழையால் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்
X

திருச்சியில் பெய்த பலத்த மழையால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.

திருச்சியில் நேற்று இரவு பெய்த பலத்தமழையால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த இந்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டர் வருமாறு:-

கல்லக்குடி- 3.4 மி.மீ, லால்குடி-46.2 மி.மீ, நந்தியாறு- 12.6 மி.மீ, புள்ளம்பாடி -16.8 மி.மீ, மண்ணச்சநல்லூர், தேவிமங்கலம்-4 மி.மீ, சமயபுரம் - 6.4 மி.மீ, சிறுகுடி-3 மி.மீ, மணப்பாறை -1.4 மி.மீ, பொன்னணியாறு அணை- 4.2 மி.மீ, முசிறி - 3 மி.மீ, புலிவலம்- 10 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு - 32 மி.மீ, துவாக்குடி- 32 மி.மீ, கொப்பம்பட்டி- 10 மி.மீ, பொன்மலை- 34.6 மி.மீ, திருச்சி ஏர்போர்ட்- 32.2 மி.மீ, திருச்சி ஜங்ஷன் - 63.4 மி.மீ, திருச்சி டவுன்- 92 மி.மீ, என திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 410.2 மி.மீட்டரும், சராசரியாக 17.09 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

திருச்சி மாநகரில் இடியுடன் பெய்த கன மழை காரணமாக மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழை தண்ணீர் நிரம்பியதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல முடிய வில்லை. அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதேபோல திருச்சியின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். செல்வ நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் விடிய, விடிய வீட்டிற்குள் வந்த மழை தண்ணீரை பாத்திரங்கள் கொண்டு எடுத்து வெளியே ஊற்றி வந்தனர். இவர்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!